இன்றைய சினிமா
தமிழ் சினிமாவின் முகம், சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு மெதுவாக மாறிவருகிறது.
செல்பேசி, இப்போதைய மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு காலச் சூழலில், அதனையே மையமாக வைத்து, ஒரு தற்காலக் காதல் கதை ‘‘குள்ளநரி கூட்டம்’’ என்று திரைப்படமாகியிருக்கிறது.
செல்பேசி உபயோகப்படுத்தும் எந்த நாட்டிலும், செல்பேசியில் உரையாடுதல், பக்கத்திலிருக்கும் வேறு எவருக்கும் தொந்தரவாயிருக்கக்கூடாது என்று பண்பாட்டோடுதான் பேசுவார்கள். நமது இடத்திலும், பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த உரையாடல் எவ்வளவு தொந்தரவு அளித்தாலும், பேசிக்கொண்டேயிருக்கும், புதிய வகை அநாகரிகத்தில் நாம் அடிமையாகிப் போகியிருக்கிறோம். ஆனால் இந்தப்படம், அந்த நாகரிகப் பண்புகள் பற்றியதல்ல. எம்.பி.ஏ. படித்திருந்தாலும், வேலை கிடைக்காத இளைஞனைப் பற்றிய கதை. எம்.பி.ஏ. படித்துவிட்டதால், ஊர் ஊராய் போய் சோப்பு விற்கிற வேலையெல்லாம் பார்க்கக்கூடாது என்ற வறட்டு கௌரவத்தில், அப்பாவின் தோளுக்கு மேல் வளர்ந்தும், அப்பாவிடம் தினம் பத்து ரூபாய் தினப்படி வாங்கிக் காலம் ஓட்டுவதை அவமானமாகக் கருதாத, ஒரு மதுரைக்கார இளைஞனைப் பற்றிய கதை. ஆனால் படம் முழுக்க நகைச்சுவை இழையோடும் காட்சி அமைப்புகளும் உரையாடலுமாய் தொய்வில்லாமல் படம் பின்நப்பட்டிருக்கிற நேர்த்தி, படத்தின் கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டே வரிகளில் கதை சொன்னால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலையில்லாத பட்டதாரி இளைஞன், அப்பாவின் செல்பேசியை ரீசார்ஜ் செய்ய அப்பா கொடுத்த 1500 ரூபாயை (1500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1800 ரூபாய்க்கு பேசும் நேரம்தரும் திட்டத்தில்) ரீசார்ஜ் செய்யும்போது, எண் மாற்றி ரீசார்ஜ் செய்ததால், அப்பாவின் செல்பேசி ரீசார்ஜ் ஆகாமல், வேறு ஒரு பெண்ணின் செல்பேசிக்கு ரீசார்ஜ் ஆகி, அந்த பணத்தை அந்த பெண்ணிடம் திரும்பப் பெற முயற்சித்து, அந்த பெண்ணையே காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் கதை. இப்போதைய இளவயதுக்காரர்கள், எப்படிப் பேசிக் கொள்கிறார்கள், எப்படிப் பழகுகிறார்கள், இவர்களின் உறவு நிலை சமூகத்தின் எல்லா முகங்களோடும் எவ்வாறு இயங்குகிறது என்பதெல்லாம் இந்தக் கதையின் ஊடே யதார்த்தமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிது. படம் முழுக்க, சின்னச் சின்னதாய் பட்டுப் பூ வைத்து தைத்தாற்போல, ஒரு மிருதுவான நெசவு, விரவிக்கிடக்கிறது. இந்தப் படத்தின் பலம் அதுதான். ஆனால் சினிமா என்பது காட்சிகளை ஆணிவேராகக் கொண்டு, பேச்சு, இசை இதெல்லாம், அந்தக் காட்சிகளில் இயல்பாய் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்குத்தான் என்ற சினிமாவின் மூலக்கூறுகள், எப்போதும் தமிழ் சினிமாவிற்குப் பொருந்தி வருவதில்லை. தமிழில் சினிமா என்றால், சினிமா பேச ஆரம்பித்த 80 ஆண்டுகள் ஆகியும் பேசுவது மாத்திரமே சினிமா என்ற பண்பு நம்மை பிரதிபலிக்கிற பண்புதான்.
மணிரத்னத்தின் படங்களில் அதிகம் பேச்சுக்களே இருப்பதில்லையே என்ற யோசனையெல்லாம் நமக்கு வேண்டாம். அவர் தமிழ் சமூகத்தை பிரதிபலிப்பதற்காக படம் இயக்குவதில்லை. ஒரே நேரத்தில் பலமொழி கலாச்சாரங்களுக்கும் ஒத்துப் போகிற, நடை, உடை, கதையமைப்பைச் சார்ந்த, பல கோடி ரூபாய் வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒரு சிலந்தி வலைப் பின்னல்கள் கொண்டது, அவரது படங்கள்.
ஆனால், இந்தப் படத்தில், பாத்திரங்கள் ஓயாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது பழகிய வகைதானே.
மதுரை என்றால், கமல்ஹாசனின் ‘‘தேவர் மகன்’’ காலத்திலிருந்து பாரதிராஜாவின் மதுரைப்படங்கள் உள்ளிட்டு, அரிவாளும் ரத்தமும்தான் என்ற உருவகம் தகர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல், பிச்சைக்காரன் வாந்தி எடுப்பதைப்போல பல வீட்டு சாப்பாடு அதில் தெரிவதைப்போல, எல்லாவகை சினிமாவும் தமிழில் உண்டு. எந்திரனைப்போல பலநூறு கோடிகளுக்கான வியாபார சாத்தியங்களோடும் படம் உண்டு. ‘‘நான் கடவுள்’’ போல பல ஆண்டுகள் தயாரித்து வெளிவரும் படங்களும் உண்டு. சினிமாவில் முகம் காட்டி பிரபலமானால், தமிழக மக்களின் அன்றாட அரசியலிலும் பிரபலமாகலாம் என்பதற்காக எடுக்கப்படும் படங்களும் உண்டு. ஆனால் சினிமா என்பது காட்சிப்படுத்திக் கதை சொல்லும் சென்ற நூற்றாண்டின் புதிய கலை வடிவம் என்ற கணக்கெல்லாம், நமக்கு ஒத்து வருவதற்கான சூழல் தமிழில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது சினிமாவின் அந்திம காலம். ஆனால், இப்போதுதான், சினிமாவின், புதிய வகைப்பாடுகளை நாம் முயற்சிக்கத் தொடங்கியிருக்கிறோம். வாசிப்புத்தன்மை மிக அருகிப்போய், ஆனாலும் தமிழில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் பிரசுரமாகிக் கொண்டிருக்கும் ஒரு விநோதமான சூழலைப்போல, தமிழ் சினிமா வியாபாரப் பொருளாதாரத்தில், பெருமளவிலான நஷ்டங்களைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சினிமா தியேட்டர்கள் வருடந்தோறும் தமிழ்நாட்டில் மூடப்பட்டுதான் வருகிறது. ஆனாலும் தமிழில் எண்ணிக்கையில் ஒரு ஒப்பீட்டு அளவில் நிறைய சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. சினிமா பார்க்கும் பழக்கமும் நாளுக்குநாள், பல்வேறு காரணிகளால், குறைந்து கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் இரண்டு வருடங்கள் ஓடிய படமும் தமிழில் இருந்தது. அதற்குப் பிறகு 100 நாட்கள் ஓடும் படங்களும் இருந்தன. ஆனால் இப்போது, 100 காட்சிகள் ஒரு படம் ஒரு திரையரங்கில் ஓடினால், வியாபார ரீதியில் ஒரு குறிப்பிடத்தகுந்த படம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவில் ஒருவர் பிரபலமானால், தமிழ் மக்கள் அவர்களை அறிவுலக மேதைகளாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் மாத்திரம் இன்னமும் பெரிய மாறுதலுக்கு உள்ளாகவில்லை. தமிழ் சினிமாவும் தமிழ் சமூக மன இயலும், மிகப்பெரிய ஆய்வுக்கு இங்கே உட்படுத்தப்படுவதில்லை. ஆனால் சில நாட்களே, சில காட்சிகளே ஓடி மறையும் புதியவகை தமிழ்ப்படங்களில், ஒரு புதிய காற்று அலையாய் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது. பல புதியவர்கள் - ‘‘பசங்க’’, ‘‘களவாணி’’, ‘‘மைனா’’, ‘‘குள்ளநரி கூட்டம்’’ போன்ற படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார்கள். இன்னமும், தமிழ் சினிமா, தமிழ் சமூகத்தை அதன் உண்மையான அர்த்தங்களில் பிரதிபலிக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை, தமிழ் சமூகத்தின் இப்பந்தி நிலைமை, தமிழ் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது என்றுகூட ஒரு வாதம் வைக்கலாம். ஆனால், குள்ளநரிக்கூட்டம் படத்தின் கதாநாயகன் விஷ்ணு, கதாநாயகி ரம்யா நம்பீஸன் மற்றும் இந்தப் படத்தில் தோன்றும் பெரும்பாலான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் இயல்பான உடல்மொழி, நடுத்தரக் குடும்ப அங்கத்தினர்களின் மனவோட்டம் பற்றி மிக யதார்த்தமான சித்தரிப்பு. பொதுவாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் மோகத்தைப் பெரிதான எதிர்ப்புணர்வு இல்லாமல் ஏற்கும் இக்கால இளைஞர்களின் மனோபாவம், எல்லாமும் இந்தப் படத்தில் நேர்த்தியாய், சித்திரிக்கப்பட்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். உலகின் இந்த மூலையில், தமிழ் சினிமா, முதலிலும் முடிவிலும், எல்லா நிலைகளிலும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் மட்டும்தான். கலையின் ஒருவகை வெளிப்பாடு சினிமா என்ற அர்த்தங்கள் நமது சூழலுக்குப் பொருந்தாது என்ற முடிவில் இருப்பவர்கள் நாம். ஆனாலும் இந்த வகை எளிமையான வெளிப்பாடு ஈரானிய சினிமாக்களின் கலை நேர்த்தியின் விளிம்பிற்காவது வந்து நிற்பதற்கான வாய்ப்புகளும் திறமைகளும் நம்மவர்களிடம் இருக்கிறது. ஆனாலும் உலக சினிமா அரங்கில், தமிழ் சினிமா அதற்கான சாத்தியமின்மைகளோடுதான் இன்னமும் இருக்கிறது.
குள்ளநரிகூட்டம் படத்தில் எதற்காக பாடல்கள் என்பதற்கான முகாந்திரமில்லை. ஆனாலும் அதற்கான நிர்பந்தங்களே, நம்முடைய மனநிலையை வெளிச்சொல்பவை. எல்லா தமிழ் சினிமாவிலும் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத அம்சம் என்று ஆகியிருப்பதற்கான காரணம் நம்முடைய இசை நாடக மரபைச் சார்ந்தது. ஆனாலும் சினிமா என்ற புதிய கலை வடிவத்தில் அது திரிபுதான். ஒரு குள்ளநரிக்கூட்டம் படத்தை வைத்து, நாம் இவ்வளவு சிந்திக்க வேண்டியதில்லை என்ற நினைப்பு எழுந்தால். அதுவேதான் நாம் தமிழ் சினிமாவின் வறிய கலை வடிவத்திற்கான காரணமும் என்பது உறுதிபடும்.
இப்போதைய தமிழ் சினிமாவின் தேவை, வெயில், களவாணி, பசங்க, மைனா, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களும் 200, 300 பேர் மாத்திரம் உட்கார்ந்து பார்க்கும் சிறிய திரையரங்குகளும்தான். குள்ளநரிக்கூட்டம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணுவுக்கு, வெண்ணிலா கபடிக்குழு என்ற படம்தான் அறிமுகம். அந்த படத்தில் உதவி இயக்குனராய் பணிபுரிந்த ஸ்ரீ பாலாஜியின் இயக்கத்தில் இதுதான் முதல் படம். மனதில் நிற்கும் இயல்பான நடிப்பும், பாத்திர சித்திரிப்புகளும், மிக மெலிதாய், படம் முழுவதும் கதை போக்கிலேயே விரவிக் கிடக்கும் நகைச்சுவையும் இந்த படத்தில் நினைக்கத் தகுந்தவை. துருத்தி நிற்காத ஒளிப்பதிவும் பொருத்தமான பின்னணி இசையும் இந்த படத்திற்கு கூடுதல் அழகு.
இப்போதெல்லாம், ஒரு தமிழ் சினிமாவை எப்படியாவது பாடுபட்டு எடுத்துவிடலாம். ஆனால் அந்த சினிமாவை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது, பலவித காரணிகளால், குதிரைக்கொம்பாய்த்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி என்ற ஹீரோக்களின் காலம் அதன் முடிவான அத்தியாயங்களை எழுதத் துவங்கியிருக்கிறது. பக்கத்துவீட்டுப் பையனின், பெண்ணின் கதையை இனி சினிமாவாக்கலாம். அன்றாட வாழ்வில் எந்த கணத்தையும் தமிழ் சினிமாவாய் மாற்ற முடியும். அதையும் சாதாரண மனிதர்களை நடிக்க வைத்து - என்பது இப்போதைய புதிய வரவேற்கத்தக்க போக்கு. நவீன தமிழ் இலக்கியத்திலும் இப்படி நிகழத் தொடங்கினால் மனசுக்கு இதமாய்த் தானிருக்கும். ஆனால் அதற்கான தற்போதைய சாத்தியமின்மையை உணர்ந்துதானோ என்னவோ கடந்த 50 ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த ஒரு இலக்கிய ஆளுமையான ஆர்.சூடாமணி, தன்னுடைய 4.5 கோடி ரூபாய் சொத்துக்களை, ராமகிருஷ்ண நிறுவன அமைப்புகளுக்குத் தானமாக்கியிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கிய மற்றும் கலை வெளிப்பாட்டு அநாதைத் தன்மைகளுக்கு யார், எப்போது, அப்படி ஒரு ஈகையை வழங்குவர்கள் என்று நாம் காத்திருக்கலாமா?
நன்றி: கணையாழி,
No comments:
Post a Comment