Wednesday, September 14, 2011

என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் - நெகிழ வைத்த மணிவண்ணன்

னி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன்.
       

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மணிவண்ணன் பேசுகையில், "நாம் தமிழர் கட்சிக்காரர்களும் சீமானும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்துவிட்டதாகக் கூறி சிலர் கிண்டலடிக்கிறார்கள்.

மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.

ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்... இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?

முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும், தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே... அந்த மனசு யாருக்கு வரும்? கருணாநிதியாக இருந்தால், தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.

ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி கேட்பதையெல்லாம், எதற்காக போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கையை எல்லாம் அந்த அம்மா நிறைவேற்றித் தருகிறார். இதற்கு நன்றி செலுத்தாமல் விட்டால் காலம் மன்னிக்காது.

திருக்குறளை சரியாகப் படித்திருந்தால் திமுகவினருக்கு செய்நன்றியின் அர்த்தம் விளங்கும். அவர்கள் கடலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததோடு சரி. அவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்.

இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான்.

தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.

நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்," என்றார்.

மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர்.

No comments:

Post a Comment