சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நர்த்தகி படத்தில் சிறுவயது கல்கியாக நடித்தவர் அஸ்வின். ஒரு ஆண் மெல்ல மெல்ல பாலுணர்வு பிறழ்ந்து பெண்ணாக மாறுகிற வேடத்தில் நடித்திருக்கிறார் இவர். இந்த கேரக்டரில் நடித்த அஸ்வினுக்கு படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேடத்தில் நடித்தது குறித்தும், இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்தும் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் அஸ்வின். அப்போது கூறியதாவது-
"நான் இப்போது ப்ளஸ் 2 படித்து வருகிறேன். சிறுவயதில் என்னை பார்த்த டைரக்டர் தங்கர்பச்சான் தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் சாரின் பேரனாக நடிக்க வைத்தார். அதன்பின் திருப்பூர் செல்வராஜ் தயாரிப்பில் டைரக்டர் பெத்தான் சாமி இயக்கத்தில் 'குருகுலம் '[என்ற படத்தில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன். எனது போட்டோவை பார்த்த டைரக்டர் விஜயபத்மா நேரில் வரவழைத்தார்.
அழகான ஆண்பிள்ளையைதான் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு நீ பொருத்தமாக இருக்கிறாய் என்று கூறி இந்த கதையை சொன்னார். அப்போதே முடிவு செய்தேன், இது சவாலான கேரக்டர் என்று. வீட்டுக்கு வந்ததும் எனக்காக என்னுடைய அப்பா குமாரும், அம்மா வித்யாவும் செய்த காரியத்தை யாருமே செய்ய மாட்டார்கள். மறுநாளே எங்கெங்கோ அலைந்து லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை எழுதிய புத்தகத்தையும், திருநங்கைகள் உலகம் என்ற புத்தகத்தையும் வாங்கி வந்து என்னிடம் படிக்க கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, சுமார் பத்து திருநங்கைகளை என் வீட்டிற்கே வரவழைத்து ஒரு வாரம் தங்க வைத்திருந்தார்கள்.
அவர்களின் நடை, மற்றும் குணாதிசயங்களை பார்த்து பார்த்து பழக சொன்னார்கள். திருநங்கைகளின் நடையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் கழுத்தை வளைத்து பார்ப்பது கூட தனி பாணியாக இருக்கும். நானும் அதை அப்படியே கற்றுக் கொண்டேன். இப்படி ஒரு செயலை செய்ய முன்வந்த என் பெற்றோர்களுக்குதான் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.
நடிக்க போவதற்கு முன்பே இப்படி என்றால் படப்பிடிப்பில் கேட்கவே வேண்டாம். சுமார் பதினெட்டு திருநங்கைகளுடன் நானும் ஒரு தம்பியாக பழகினேன். "
நடிக்க வந்துவிட்ட அஸ்வினுக்கு படிப்பை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் இல்லை. இத்தனைக்கும் இவர் நன்றாக படிக்கிற மாணவர்தானாம். அதற்கு காரணம் கூட அஸ்வினின் பெற்றோர்தான். அஸ்வினே சொல்கிறார்
"எங்க அம்மா என்னிடம், உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அந்த துறையில் முழுமையா ஈடுபடுன்னு சொல்வாங்க. எவ்வளவுதான் ஒரு குழந்தையை வற்புறுத்தி நமது விருப்பத்துக்கு படிக்க வைத்தாலும் எதிர்காலத்தில் அந்த குழந்தை என்ன நினைத்ததோ, அதை நோக்கிதான் போகுது. எதற்காக குழந்தைகளின் ஆசையை முடக்கணும். படிக்கணும்னு ஆசைப்பட்டா டிஸ்டன்ஸ் எஜுக்கேஷன் இருக்கு. அதில் படிச்சுட்டு போகட்டுமே என்பார். அவர் தந்த ஊக்கத்தால்தான் என் சினிமா ஆர்வம் நிறைவேறியது என்றார் அஸ்வின்.
இவரது தங்கை வர்ஷாவும் ஒரு குழந்தை நட்சத்திரம்தானாம். மாசிலாமணி, ராவணன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது விதார்த் நடிக்கும் கொள்ளைக்காரன் படத்தில் மூளை வளர்ச்சியில்லாத குழந்தையாக நடிக்கிறாராம்.
No comments:
Post a Comment